தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்

தேமுதிக தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி,வாருங்கள் தோழர்களே ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்

தேமுதிக தலைவரின் நேர்முக பேட்டி,

leave a comment »

டெல்லி விசிட்டில் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன?

“மிக நன்றாக அமைந்திருந்தது. தமிழ்நாட்டில் இருந்து தொண்டர்கள் கொஞ்சம்பேர் அங்கே வந்திருந்தாலும் ,டெல்லியிலிருந்தே கூடிய கூட்டம் சாதாரணமானதல்ல. பொதுவாக டெல்லியில் தமிழ்நாட்டில் கூடுகிற மாதிரி அரசியல் கூட்டங்களுக்கு கூட்டம் கூடாது. அதற்கு அவ்வளவு ரெஸ்பான்ஸும் இருக்காது. ஆனால், அங்குள்ள மக்கள் அந்த மரபை உடைத்து என்னை சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டார்கள். தவிர, இதுவரைக்கும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதுவும் டெல்லியில் அலுவலகம் திறக்கவில்லை. அவரவரும் தமிழ்நாடு இல்லத்தில் ஓர் அறையை வைத்துக்கொண்டு ‘லாபி’ நடத்துவார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் பூராவும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் நாம்தானே கவனிக்க வேண்டும்? அதற்காக டெல்லியில் ஓர் அலுவலகம் திறக்கச்சொல்லி நிறையப்பேர் கேட்டார்கள். இதேபோலத்தான் மும்பையில் 40 இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கே அவர்கள் கேட்டதற்கு இணங்க ஓர் அலுவலகம் திறந்தோம். இப்போது நாட்டின் தலைநகரில் திறந்துள்ளோம்!”

கர்நாடகா_பெங்களூருவில் இதைவிட அதிகமாய் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கே முதலில் அலுவலகம் திறக்காமல் டெல்லிக்கு மட்டும் என்ன அவ்வளவு அவசியம்? அவசரம்?

“பெங்களூருவைப் பொறுத்தவரை 14 தொகுதிகளில் தமிழர்கள் வாழும் பகுதி இருக்கு. அங்கே தொகுதி வாரியாக அலுவலகங்கள் அமைக்கணும். அதையெல்லாம் நம்பிக்கையான, பொறுப்பான ஆட்கள் நடத்த முன் வரவேண்டும். தவிர, நம்ம கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள்தானே ஆகிறது. . இது இப்போதுதானே ஆரம்பம்? ஒவ்வொன்றாகத்தானே இதைச்செய்ய முடியும்? நம்பிக்கையான நபர்கள் முன்வரும்போது அங்கெல்லாம் அலுவலகங்கள் திறக்கப்படும்!’’

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. போன்ற முன்னணி கட்சிகள் கூட டெல்லியில் அலுவலகம் அமைக்காத நிலையில், நீங்கள் திறந்திருப்பது கொஞ்சம் ஓவராகப்படுவதாக பேச்சு உள்ளதே? 

“இதில் என்ன இருக்கு? எங்களுக்கு மும்பையிலும் சரி, டெல்லியிலும் சரி நிறையப்பேர் கோரிக்கை வைத்தார்கள், அலுவலகங்களைத் திறந்திருக்கோம். அதே கோரிக்கையை அங்குள்ள மக்கள் நீங்கள் சொல்லும் கட்சிகளிடம் ஏன் வைக்கவில்லை என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்!’’

டெல்லி அலுவலகத் திறப்பையொட்டி அதன் அன்றாட வேலைகள், செயல்திட்டங்கள் என்று ஏதாவது வைத்துள்ளீர்களா?

‘‘செயல் திட்டம் என்று தனியாகச் சொல்வதில் அர்த்தமில்லை. அங்குள்ள மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத்தான் கவனிக்கப்போகிறோம். இப்போது நான் போனபோது நடந்த சம்பவங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்! நான் போனவுடன் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களுக்கு ரேஷன்கார்டு இல்லை; வாக்காளர் அடையாள அட்டை இல்லை; வாழ்வுக்குப் பாதுகாப்பு இல்லை… என்றெல்லாம் புகார் சொன்னார்கள். அதை உடனடியாக அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, அங்குள்ள முதலமைச்சர் ஷீலாதீட்சித்திடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். அவரும் உடனே சந்திக்க அனுமதி தந்தார். அவர் மற்ற முதல்வர்களைப்போல் இல்லை. ரொம்பவும் இயல்பாக நடந்து கொண்டார். மக்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ள அத்தனைபேருக்கும் ரேஷன் கார்டு கொடுப்பதாக உறுதியளித்தார். வாக்காளர் அடையாள அட்டைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்தார். இதையெல்லாம் தலைமைக்கழகத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிவிட்டுத்தான் வந்தேன்!’’

டெல்லி முதல்வரிடம் பேசியது சரி. சரத்பவாரிடம் பேச என்ன அவசியம்?

“உண்மையிலேயே நட்பு முறையில்தான் பேசினேன். நம்புங்கள். அவருக்கு சென்னையில் நிறைய நண்பர்கள் உண்டு. அவர்கள் அவரைச் சந்திக்கச் சொன்னார்கள். ஒரு முறை அவர் சென்னை வந்தபோது சந்திக்க நினைத்தேன். பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. அடுத்ததாக கடந்த 26, 27 தேதிகளில் நண்பர் திருமணம் ஒன்றிற்கு மதுரை வந்திருந்தார். அப்போதும் சந்திக்க நினைத்து முடியாமல் போனது. இப்போது டெல்லிக்குப் போனபோது, இப்போதாவது பவாரை சந்திக்கலாமே என்று கேட்டார்கள் எனது நண்பர்கள். கேட்டவுடன் சந்திப்புக்கு அனுமதியும் கிடைத்தது. போய் சந்தித்தேன். எல்லாமே மரியாதை நிமித்தமான சந்திப்புதான்!’’

அதற்காக பிரகாஷ் காரத் சந்திப்பும் அப்படித்தான் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது? அவருடனான சந்திப்பில் அரசியல் பேசவேயில்லையா?

(இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பெரிதாகச் சிரிக்கிறார். அதில் பல அர்த்தம் பொதிந்து கிடப்பதை நம்மால் உணர முடிவதை அவரும் உணர்ந்து கொள்கிறார்)

“எல்லோருமே இப்படித்தான் சொல்கிறார்கள். சிலர் எழுதுகிறார்கள். ஆனால் அப்படி இல்லவேயில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால் நான் மறைக்கவும் மாட்டேன். அதே சமயம் எல்லாவற்றையும் வெளியே சொல்லவும் முடியாது. நான் சந்தித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சில கமிட்மெண்ட்டுகள், நெருக்கடிகள் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது மிலிட்டரி ரகசியம் போல பாதுகாக்கப்பட வேண்டியதாகும்!’’

டெல்லியில் மூன்றாம் அணித் தலைவர்கள் பிரகாஷ்காரத், சரத்பவார் போன்றோரைச் சந்தித்த நீங்கள் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லையே? அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

“இதிலும் எந்த அரசியலும் இல்லை. பரதனுக்கும், காரத்துக்கும் நேரம் கேட்டு கடிதம் கொடுத்திருந்தேன். காரத் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். பரதனிடம் கிடைக்கவில்லை. அதுபோல இன்னும் சிலருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்களிடம் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை. அதனால் இது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது!’’

எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து அறிவித்து வந்த நீங்கள், இப்போது டெல்லியில் ‘தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று எழுதிக்கொடுக்கிற கட்சியோடு கூட்டணி’ என்று அறிவித்துள்ளீர்களே? இது உங்கள் கட்சிக்குப் பின்னடைவு இல்லையா?

“இதில் என்ன பின்னடைவு? தொகுதி உடன்பாடு எழுதிக் கொடுத்துக் கொள்கிறீர்கள்? எனக்கு இரண்டரை வருஷம், உனக்கு இரண்டரை வருஷம் சி.எம். பதவி என்று எழுதிக் கொடுத்து பதவியை அனுபவிக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன்னு எழுதிக் கொடுக்கக்கூடாதா? அதைச் செய்யுங்க. கூட்டணிபற்றி பரிசீலிப்போம்னு சொல்றேன். இதுல என்னங்க தப்பு?’’

எந்த மாதிரியான விஷயங்களை எழுதிக்கொடுக்கவேணும்னு கேட்கிறீங்க? இதில் குறைந்தபட்ச செயல்திட்டம் மாதிரி ஏதாவது உண்டா?

“அதற்கு இன்னும் காலங்கள் இருக்கு. நேரம் வரும்போது மனதில் அப்போது தோன்றுவதை எழுதச் சொல்லுவோம். உதாரணத்திற்கு முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இருக்கு. பாலாறு பிரச்னை இருக்கு. ஒகேனக்கல் பிரச்னை இருக்கு. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டுப் போட்டு ஓட்டு வாங்கும் கட்சிகளே பின்னர் வேறு வேறு பிராந்தியத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கின்றன. காவிரி பிரச்னைக்காக அன்று வாழப்பாடி ராமமூர்த்தி தன் அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். இப்போது இத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரச்னைகளும் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. யாராவது ஓர் அமைச்சர் பதவி விலக முன்வருவாரா? அப்படிப்பட்ட பிரச்னைகளைத்தான் நாங்கள் எழுதிக் கேட்கப் போகிறோம்!’’

நீங்கள் காரத்தை 35 நிமிடநேரம் சந்தித்துப் பேசியதன் மூலம் உங்கள் தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கறுப்பு எம்.ஜி.ஆர். சிவப்பாகிறார். மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் தலைமையேற்கப் போகிறார். ‘சிவப்பு மல்லி’, ‘ஜாதிக்கொரு நீதி’ படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதி கேரக்டர்களைப்போல நிஜத்திலும் மேடைதோறும் முழங்கப்போகிறார்!’ என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்களே?

         “நான் கம்யூனிஸத்தை எப்போதும் எதிர்த்தவனில்லை,கம்யூனிஸம் என்பது வறுமையில் பங்குபோடுவது மட்டும் கிடையாது. வளமான இந்தியாவிலும் பங்குபெறலாம் என்பதுதான் என் ஆதங்கம். சீனா வளமான சீனாவாக மாறி இருக்கிறது. இப்படியிருக்கும்போது நாம் மட்டும் கிழிஞ்ச சட்டைபோட்டுட்டு வந்தோம்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு? வறுமையில் மட்டுமல்ல; வளமான இந்தியாவிலும் பங்கு போடணும். அதைத்தான் நான் வரவேற்கிறேன்.  அதை பிரகாஷ்காரத் பொதுவாகவே புரிந்து வைத்திருக்கிறார். ரொம்ப பிரில்லியண்ட்டாகவும் இருக்கார். அவருடன் பேசியது ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ சிவப்பாக மாறுகிறார். என்ற பேச்சை எழுப்புகிறதென்றால், அதற்கு நான் என்ன செய்ய? கறுப்பு எம்.ஜி.ஆராக இருந்தால் என்ன? அவருக்குள் ஓடுவதும் சிவப்பு ரத்தம்தானே? ‘மூன்றாவது அணிக்கு தலைமையேற்பீர்களா?’ என்று கேட்டீர்கள். நான் போடுகிற கண்டிஷனுக்கு மூன்றாவது அணி ஒத்துவரட்டும். நான் சொல்லுகிற மாதிரி எழுதித்தரட்டும். பிறகு பார்க்கலாம்!’’

எல்லாம் சரி, சமீபத்தில் ரஜினியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தீர்கள். என்ன பேசினீர்கள்?

“உண்மையிலேயே ஒண்ணும் பேசலைங்க. அவர் ஒரு பக்கம் ஒரு சீட்ல உட்கார்ந்திருந்தார். நான் ஒருபக்கம் ஒரு சீட்ல உட்கார்ந்திருந்தேன். விமானத்தை விட்டு இறங்கும்போதுதான் ‘என்ன விஜி, என்ன படம் போயிட்டிருக்கு? ‘அரசாங்கம்’ என்ன ஆச்சு? எப்ப ரிலீஸ்?’னு கேட்டார். நானும் பதில் சொன்னேன். அதற்குள் அவரவர் வாகனங்களுக்கு அருகே வந்துவிட்டதால், அவரவர் வண்டியில் ஏறிச்சென்றுவிட்டோம். அதைத்தான் சில பத்திரிகைகள் எதையெதையோ திரித்து எழுதுகின்றன.’’

இலங்கைத்தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய பதிலைக் கொடுத்துள்ளீர்களே?

“நான் சர்ச்சைக்குரிய பதில் எதுவும் தரவில்லை. அதை வெளியிட்டவர்கள்தான் திரித்துப் போட்டுவிட்டார்கள். ‘இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுக்கலாமா? கூடாதா?’ என்ற கேள்விக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ஆயுதம் எதுவும் கொடுக்கக்கூடாது என்பது தமிழர்களின்_தமிழ்நாட்டின் நிலை. அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், இந்திய நாட்டைப்பொறுத்தவரை, ‘ஆயுதம் கொடுக்காவிட்டால் பாகிஸ்தானும், சீனாவும் உள்ளே வந்துவிடுவார்கள். இது இந்திய பாதுகாப்புக்கு அபாயத்தை விளைவிக்கும்!’ என்பது இன்னொரு நிலை. என்னைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட இயக்கம்னு சொல்றவங்க கூடவெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேச்சுவார்த்தை நடத்துறீங்க. அதுபோல இலங்கைத்தமிழர் விஷயத்திலும் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்க. முடிவு எடுங்க. என்னைப் பொறுத்தவரை எங்கும், எதிலும் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது. அவ்வளவுதான்!’’
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Written by dmdk

மே 28, 2008 இல் 8:17 முப

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: